கரூர், ஜூலை 27: எல்நினோ தாக்கத்தால் இயல்பை விட பருவ மழை குறையும், குறுவை, மானாவாரி பயிர்கள் அதிகளவில் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே உடனே காப்பீடு செய்து கொள்ளுங்கள், கால அவகாசம் நீட்டிக்க முடியாது என்று கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் 2026-27ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் எல்நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென் மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026-ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், தக்காளி ஆகிய பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை 25.06.2026 முதல் விவசாயிகள் தேசிய பயிர்க்காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை பருவத்தில் வெங்காயம், தக்காளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 31.08.2026 ஆகும். வாழை, மரவள்ளி மற்றும் மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு 15.09.2026 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் வட்டாரங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு , நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு , நடவுபொய்த்தல், பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி காலநிலை இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்களின் கீழ் காப்பீடு செய்யப்படுகின்றன. எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் (இ-சேவை மையங்கள்) அல்லது தேசிய பயிர்க்காப்பீட்டு இணையதளத்தில் (https:,,pmfby.gov.in,) உள்ள விவசாயிகள் கார்னர் வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் , விதைப்பு அறிக்கை, வங்கி கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Adhaar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான இரசீதையும் பெற்றுக்கொண்டு, அதில் தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் , குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ, தோட்டக்கலை அலுவலரையோ, உதவி தோட்டக்கலை அலுவலரையோ அல்லது வங்கி கிளைகளையோ அணுகலாம். விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இப்பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கரூர் மாவட்ட விவசாயிகள் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
