சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

குறிஞ்சிப்பாடி, மே 28: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த சின்ன தோப்புக்கொல்லை கிராம சுடுகாட்டில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்பாலின் போட்டு மூடப்பட்டிருந்தது. இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சின்ன தோப்புக்கொல்லை சுடுகாட்டிற்கு சென்று, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அதில், 300 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை செய்ததில், ரேஷன் மூட்டைகளை அடுக்கி வைத்த நபர் குறித்து விவரம் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாதேவியிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் எடுத்துச் சென்று நெய்வேலி உணவு பாதுகாப்பு கிடங்கில் வைத்தனர். சுடுகாட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: