900 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

விழுப்புரம், மே 26: அரகண்டநல்லூரில் மண்ணெண்ணெய் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து 900 லிட்டரை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் ரேஷன் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி போலீசார் நேற்று மாலை திடீர் வாகன சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில் வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, நான்கு பேரல்களில் 900 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் அருகே ப.வில்லியனூரைச் சேர்ந்த கருணாகரன் என்பது தெரியவந்தது. இவரும், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும் சேர்ந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு மண்ணெண்ணெய் வாங்கி விழுப்புரம் பகுதியில் கொண்டு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கருணாகரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 900 லிட்டர் மண்ணெண்ணெய், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர். மேலும் ஏழுமலையை தேடி வருகின்றனர்.

Related Stories: