வண்டல் மண் எடுத்துச் செல்ல விதிமுறைகளை தளர்த்த வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை

உடுமலை, மே 25: திருப்பூர் மாவட்ட அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில், விவசாய பயன்பாட்டுக்காக வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி மண்ணை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.அதே வருவாய் கிராமம் அல்லது அதை ஒட்டிய கிராமத்துக்கு மட்டும் மண் எடுத்துச் செல்லலாம், வாகனங்களில் மண் ஏற்றிவிட காசோலை மூலம் பணம் செலுத்த வேண்டும், மண் அள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் ஏற்க முடியாதவை.காரணம், கிராமத்தை ஒட்டி நீர்நிலை இருந்தால் மட்டுமே விவசாயிகள் பயன்பெற முடியும். எனவே, கடந்த காலங்களில் கிடைத்ததை போல், அனைத்து பகுதிகளுக்கும் வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். விவசாயிகளே ஜேசிபி ஏற்பாடு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும். வட்டாட்சியர் மட்டத்திலேயே அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: