நெல்லை அருகே ஆர்எஸ்எஸ் நிர்வாகி மர்மச்சாவு பாஜ மறியல், பேச்சுவார்த்தைக்கு பின் உடல் ஒப்படைப்பு

கேடிசி நகர், மே 25:  நெல்லை அடுத்த மானூர் அருகேயுள்ள நெல்லை திருத்து தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கரனின் மகன் முருகன் (45). ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசார அணி மானூர் ஒன்றியச் செயலாளரான இவர், கங்கைகொண்டான் சிப்காட்டில் தனியார் டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தனது மைத்துனர் மாரியப்பனை மானூரில் இருந்து களக்குடிக்கு பைக்கில் அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டு வந்த முருகன், வழியில் களக்குடி- எட்டான்குளம் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து விரைந்துவந்த மானூர் போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் முருகனின் சாவில் மர்மம் உள்ளதாகவும், யாரோ அடித்துக் கொலை செய்துள்ளனர் என்றும், கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பாஜ, இந்து முன்னணியினர் நெல்லை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர். பாஜ மாவட்டத் தலைவர் தயாசங்கர் தலைமை வகித்தார்.

இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் முன்னிலை வகித்தார்.  ஆர்எஸ்எஸ் கோட்ட செயலாளர் ஜோதிந்திரன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரமநாயகம், பாஜ மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல்ஆறுமுகம், முத்துபலவேசம், ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் லோக்தந்தர், பாளை மண்டல பாஜ தலைவர் குருகண்ணன், முருகதாஸ், விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி ஆறுமுக கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்த பாளை போலீஸ் உதவி கமிஷனர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சென்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கவே, அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே முருகன் உயிரிழந்ததை, சந்தேக மரணம் என்று மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எஸ்பியிடம் மனு

நெல்லை எஸ்பி சரவணனை சந்தித்து பாஜ நிர்வாகிகள் அளித்த மனுவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி முருகன் பிரேத பரிசோதனையை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர் குழுவினர் மேற்கொள்ள வேண்டும். அந்த நிகழ்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதன்படி  மருத்துவ குழுவினர் மேற்கொண்ட முருகனின் பிரேத பரிசோதனை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

Related Stories: