சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நெல்லிக்குப்பம், மே 14: நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை முன்னிட்டு கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் சிவலிங்கத்திற்கும், நந்தீஸ்வரருக்கும் பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நந்தீஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தம்பதியர்களாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதே போல் நெல்லிக்குப்பம் அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோயில், திருகண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோயில், வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் கோயில், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோயில், திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் கோயில், வெள்ளப்பாக்கம் சிவலோகநாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: