தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் கொட்டும் மழையில் அமைச்சர் நேரு ஆய்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

ஆத்தூர், மே 13: ஆத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும், ஓராண்டு சாதனை விளக்க பொதுகூட்ட மைதானத்தை, அமைச்சர் நேரு கொட்டும் மழையில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில், தனியாருக்கு சொந்தமான மைதானத்தில், வரும் 18ம் தேதி மாலை திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலஉதவிகளை வழங்கி பேசுகிறார். இதனையொட்டி, கூட்ட மேடை அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நேற்று காலை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவலிங்கம் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, செல்லியம்பாளையத்திற்கு நேரில் சென்று கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்டார். அப்போது, திடீரென மழை பெய்ததால் குடை பிடித்தவாறு மைதானப்பகுதி முழுவதும் பார்வையிட்டு எந்தெந்த பகுதியில் என்னென்ன எற்பாடுகளை செய்வது என்பது குறித்து திமுகவினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன், நகர செயலாளர்கள் வேல்முருகன், பாலசுப்ரமணியன், நகர்மன்ற தலைவர்கள் அலெக்சாண்டர், நிர்மலா பபிதா மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, நெசவாளரணி ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், குமார் பர்கத், மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: