சிதம்பரம் நகரில் நீர்வழி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு

சிதம்பரம், மே 13: சிதம்பரம் நகரில் உள்ள கான்சாகிப் வாய்க்காலை ஒட்டி அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு ஏற்கனவே நீர்வழியை ஆக்கிரமித்து  கட்டப்பட்டிருந்த சுமார் 30 வீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இரண்டாவது கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன், மற்றொரு புறம் உள்ள சுமார் 40 வீடுகளை இடிக்க வந்தனர். அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சில நாட்கள் கால அவகாசம் வழங்கினர். கால அவகாசம் முடிவடைந்ததால் நேற்று மீண்டும் வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்போடு வந்தனர். அப்போது வீடுகளை இடிக்கும் பணிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பொக்லைன் இயந்திரம் முன்  தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி தேர்வு நடப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும், அதற்குள்ளாக வீடுகளை தாங்களாகவே இடித்துக் கொள்வதாகவும் கூறினர். இதையடுத்து அந்த நகரின் முனையில் இருந்த கழிவறை கட்டிடத்தை இடித்து அகற்றிய அதிகாரிகள் வீடுகளை இடிக்க கால அவகாசம் வழங்கினர். இதற்கிடையே சம்பவ இடத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துவை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஞானசேகர் ஒருமையில் பேசினார். இதனால் பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் மீண்டும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: