கருக்கலைப்பு செய்த மெடிக்கலில் ஆய்வு அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை போல் செயல்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி

திட்டக்குடி, மே 10:  கடலூர் மாவட்டம் ராமநத்தத்தில் உள்ள தனியார் மெடிக்கலில் கடந்த 5ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி அனிதா (27) என்ற பெண்ணுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அனிதா பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 7ம் தேதி உயிரிழந்தார். சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மெடிக்கல் உரிமையாளர் முருகன் (52) தலைமறைவானார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகனைத் வலைவீசி தேடிவருகின்றனர். இந்நிலையில் ராமநத்தத்தில் முருகன் மெடிக்கல் நடத்தி வந்த கட்டிடத்தை கடலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையிலான மருத்துவக்குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

 ராமநத்தம் தனியார் கட்டிடத்தில் மூன்று பெரிய அறைகள் கொண்ட கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனை போலவே செயல்பட்டு வந்தது ஆய்வில் தெரியவந்தது. மேலும் மருந்தகம், உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை, மினிஆப்ரேஷன் தியேட்டர் செயல்பட்டதாகவும் அதிகாரிகள் ஆய்வில் கூறப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆவணங்கள் பல மர்மமான முறையில் அங்கிருந்து எடுத்துச்சென்றிருப்பதும் தெரிந்தது. ஆய்வின் போது திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் சேபானந்தம், தொழுதூர் அரசு மருத்துவர் கொளஞ்சிநாதன் மற்றும் சுகாதாரத்துறையினர், ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகனைக் கைது செய்தால் தான்  பல தகவல்கள் வெளிவரும் என்பதால் ராமநத்தம் போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: