கிருமாம்பாக்கம் கொலை முயற்சி சம்பவம் ரவுடிகளுக்குள் கோஷ்டி மோதலா? போலீசார் விசாரணை

பாகூர், ஏப். 28: புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அமுதன் (34). இவர் மீது பிள்ளையார்குப்பம் முன்னாள் கவுன்சிலர் வீரப்பன், இவரது மைத்துனர் சாம்பசிவம் ஆகியோரை கொலை செய்த வழக்கு, ஏனாம் சிறைக்குள் அத்துமீறி நுழைந்து ரவுடியை கொலை செய்ய முயன்ற வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே உள்ள அமுதன் அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த நண்பர் சுபாஷ் என்பவருடன் நேற்று முன்தினம் கடலூர் நீதிமன்றத்தில் வீரப்பன் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு, புதுச்சேரி கிருமாம்பாக்கம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அபிஷேகப்பாக்கம் சுபாஷ் பைக்கை ஓட்டிய நிலையில், அமுதன் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். புதுச்சேரி- கடலூர் சாலை காட்டுகுப்பம் துணை மின்நிலையம் அருகே அவர்கள் இருவரும் வந்தபோது, மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமுதனை வெட்டியுள்ளனர்.இதில் அவரது தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மீண்டும் அவரை வெட்ட முயன்றபோது, அந்த மர்ம நபர்கள் மூவரும் பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். அப்போது சுதாரித்துக் கொண்ட அமுதன், சுபாஷ் இருவரும் பைக்கை வேகமாக ஓட்டி, தப்பிச் சென்று கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அமுதனை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி அமுதன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் கொலை முயற்சியில் ஈடுபட்டது யார்  என்பது மர்மமாக உள்ளது. அதில் ரவுடி அமுதன், பிள்ளையார்குப்பம் சுபாஷ் மற்றும் கிருமாம்பாக்கம் புகழுடன் இணைந்து வீரப்பன் மற்றும் அவருடைய மைத்துனரையும் வெட்டி படுகொலை செய்தனர். இதற்கிடையே இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு அமுதன் ஒரு தரப்பாகவும், சுபாஷ் மற்றும் புகழ் ஆகியோர் வேறு ஒரு தரப்பாகவும் செயல்பட்டு வந்துள்ளது தெரியவந்தது. இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு கொலை முயற்சி நடந்திருக்குமா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதில் ஒரு சிலர் தலைமறைவாக இருப்பதால் போலீசாருக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.

Related Stories: