விருத்தாசலத்தில் அரசு பேருந்தில் ஏறிய பள்ளி மாணவனை தள்ளிவிட்ட கண்டக்டர் காவல் நிலையம் முன்பு பேருந்தை நிறுத்தி மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம், ஏப். 19: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் இருந்து குப்பநத்தம் வரை செல்லும் அரசு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அதில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 பயிலும் மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது பேருந்து பாலக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது மாணவர்களிடம் கண்டக்டர் குமார், எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், பூதாமூர் செல்வதாக கூறியுள்ளனர். இந்த பேருந்து பூதாமூர் செல்லாது என கூறி அவர்களை பேருந்தில் இருந்து கண்டக்டர் தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில், ஒரு மாணவனின் சட்டை, பேருந்து படிக்கட்டு கம்பியில் சிக்கி கிழிந்ததால், கண்டக்டர் குமாருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விருத்தாசலம் காவல் நிலையம் அருகே பேருந்து வந்ததும், பேருந்தை நிறுத்திய மாணவர்கள் காவல் நிலையத்தில் போலீசாரிடம் சம்பவத்தை கூறியுள்ளனர். மேலும் கண்டக்டர் போதையில் இருந்ததாகவும், அதனால் மாணவர்களை தள்ளி விட்டதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார், மாணவர்களை சமாதானப்படுத்தியதுடன் அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அரசு பேருந்து கண்டக்டரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: