முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம்

பாபநாசம், ஏப்.19: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 9ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, முதலிய திருக்கோயில் திட்டத்துடன் தொடங்கியது. 10ம் தேதி மகா துவாஜரோகனம் கொடியேற்றப்பட்டது. பின்னர் விநாயகர்,  வள்ளி, தேவசேனா சமேத  சுப்பிரமணிய சுவாமி,  சண்டிகேஸ்வரர் உற்சவ மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு படி சட்டத்தில் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்லக்கில் சுவாமி திருவீதிஉலா மற்றும் இடும்பன் வாகனம், பூத வாகனம், ஆட்டுக்கடா வாகனம், தங்கமயில், வெள்ளி மயில், ஏனைய பரிவார வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. சப்பரத்தில் பஞ்சமூர்த்தி திருவிழா காட்சியும், தொடர்ந்து யானை வாகனம், காமதேனு வாகனம் வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதி உலா காட்சி, மற்றும் வெள்ளிகுதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக நேற்று காலை 9ம் நாள் திருவிழாவை முன்னிட்டு சித்திரை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (19ம் தேதி) மதியம் தீர்த்தவாரியும் இரவு அவரோகணம் திக்விதர்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிறைவாக நாளை (20ம் தேதி) சித்திரை திருவிழா முடிந்து சுவாமி யதாஸ்தானம் சேருதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: