எருமாபாளையத்தில் ₹21.31 கோடியில் பசுமை தளமாக மாறும் குப்பைமேடு விரைந்து முடிக்க ேமயர் அறிவுறுத்தல்

சேலம், ஏப். 5: சேலம் எருமாபாளையம் குப்பைமேட்டை ₹21.36 கோடியில் பசுமை தளமாக மாற்றி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று  மேயர் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம் 44வது வார்டு பகுதியில் மாநகராட்சி பள்ளியில் ₹5.32 லட்சம் மதிப்பில் சத்துணவு மையக்கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆகியோர்  நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து அங்குள்ள தேசிய புனரமைப்பு காலனி அந்தேரிப்பட்டியில் சாலை அமைக்கும் பணி மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாக்கடை வசதிகள், சாலை வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தனர்.

மேலும் ஏற்கனவே உள்ள மகளிர் சுகாதார வளாகங்கள், கழிப்பிடங்கள் ஆகியவற்றை ₹34 லட்சத்தில் பழுது பார்த்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும் கிச்சிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள கழிப்பிடங்களை பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், எருமாபாளையம் திடக்கழிவு கிடங்கினை நவீன முறையில் சுகாதாரமான  பசுமை தளமாக மாற்றி அமைக்கும் பணியை பார்வையிட்டனர். 7.90 ஏக்கர் நிலப்பரப்பில் 3 தளங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புல் தளங்களுடன் கூடிய திறந்தவெளி பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், நடைமேடை அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கான இருக்கை வசதியும் செய்யப்படுகிறது. இது போன்ற பணிகள் ₹21.31 கோடியில் நடந்து வருகிறது.  இந்த பணியை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘எருமாபாளையம் குப்பை மேட்டில் தரைமட்டத்திலிருந்து, 7.9 ஏக்கர் பரப்பளவில்  10 மீட்டர் உயரத்திற்கு உபயோகமற்ற பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தப்படுகிறது. இந்த கழிவுகள் சரியாத வகையில்  பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியும், 11 மீட்டர் நீளத்திற்கு பழைய திடக்கழிவுகளை சமன்படுத்தும் பணிகளும் நடைபெற்று உள்ளது. தரைப்பகுதி சமன்படுத்துதல், புல் தளங்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும், என்றார். ஆய்வின் போது துணை மேயர் சாரதாதேவி, மாநகர பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், 44 வது வார்டு கவுன்சிலர் இமயவர்மன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: