பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை அனுமதி

தூத்துக்குடி, மார்ச் 26: பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை அனுமதி வழங்க வேண்டுமென பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறை ஓய்வூதியர் சங்க 6வது மாநில மாநாடு,  தூத்துக்குடியில் துவங்கியது. மாநில தலைவர் நரசிம்மன், வரவேற்பு குழு தலைவர் ரசல் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணை  செயலாளர் முத்துகுமார சுவாமி, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். வரவேற்பு குழு பொதுச் செயலாளர் ராமர், மாநில செயலாளர் குப்புசாமி ஆகியோர் வரவேற்று பேசினர். அகில இந்திய பொதுச் செயலாளர் ஜெயராஜ் மாநாட்டை  துவக்கி வைத்து பேசினார்.

அகில இந்திய துணை தலைவர் மோகன்தாஸ், துணை பொதுச் செயலாளர் செல்லப்பா, துணை பொருளாளர் பங்கஜ வள்ளி ஆகியோர் பேசினர். மாநாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க உடனடியாக அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன் மாற்றம் வழங்கியதுபோல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். 2019 முதல் வழங்கப்படாமல் இருக்கும் மருத்துவப்படி, 9 மாத பஞ்சப்படியை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, அதனை உடனடியாக வழங்க வேண்டும். வரும் 28, 29ம் தேதிகளில் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு  முழு ஆதரவு வழங்கி, போராட்டத்தில் கலந்து கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதில்  மாநில செயலாளர் குப்பன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் உடபட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: