உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நேற்று மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர்  ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.அப்போது அவர் கூறும்பொழுது, `பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம். இதன் மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். புதியதாக வீடு கட்டும்போதும் மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும்.

உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும். தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை’ என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் அமலதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: