விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசிமக திருவிழா

விருத்தாசலம், பிப். 8: விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் மாசிமக உற்சவத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு இந்த வருடத்திற்கான மாசிமக திருவிழா இன்று காலை 11 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளின் வீதியுலா நிகழ்ச்சிகள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறும். இதில் 6ம் நாள் திருவிழாவான 13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் விபசித்து முனிவருக்கு காட்சி அளித்தல், சிகர விழாவான 9ம் நாள் 16ந் தேதி விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் தேரோட்ட நிகழ்ச்சியும், விழாவின் 10ம் நாளான 17ந் தேதி மாசி மக உற்சவமும், 18ந்தேதி தெப்ப உற்சவமும், 19ந் தேதி சண்டிகேஸ்வரர் உபயத்துடனும் திருவிழா முடிவடைகிறது.

மாசிமக திருவிழா தொடங்குவதற்கு முன்பாக கிராம தேவதைகளின் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 6ஆம் தேதி  கும்பாபிஷேகம் நடைபெற்றதால், அதனை முன்னிட்டு, பிள்ளையார் பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, செல்லியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அய்யனார் சாந்தி ஹோமம் நடைபெற்று பரிவார தேவதைகளுக்கு அணிகை பெறும் நிகழ்ச்சி முடிந்தது. இதனால் நேரடியாக மாசிமக பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அறிவிப்பு இல்லாததால் தினமும் நாதஸ்வர இசையும், ஓதுவார் நிகழ்ச்சியும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: