ரயில்வே பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பதாரர் கருத்து கேட்பு முகாம் குறைபாடுகளை களைய நடவடிக்கை

நெல்லை, ஜன.29: ரயில்வே பணியாளர்கள் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் கருத்து கேட்பு முகாம் நேற்று முதல் தெற்கு ரயில்வே கோட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘‘ரயில்வே உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதுகுறித்து சில குறைபாடுகளை விண்ணப்பதாரர்கள் தெரிவித்து வருகின்றனர். அதுபற்றி விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்றை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது. சமீபத்திய தேர்வு முடிவுகள், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய கையாளப்பட்ட முறை, இரண்டாம் கட்ட தேர்வு ஆகியவை குறித்து இந்த குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் கருத்துகளை அறிவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வு சம்பந்தமான கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை ரயில்வே தேர்வாணைய  இணையதளத்தில் உள்ள www.iroams.com/outreach இணைய முகவரியில் நேற்று (28ம் தேதி) முதல் வரும் பிப்ரவரி 16 வரை விண்ணப்பதாரர்கள் பதிவிடலாம். மேலும் உதவிச் செயலாளர், ரயில்வே பணியாளர் தேர்வாணையம், எண் 5, டாக்டர் பி.வி.செரியன் கிரசன்ட் சாலை, எத்திராஜ் கல்லூரி பின்புறம், எழும்பூர், சென்னை - 600008 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு குறித்த தங்கள் சந்தேகங்களை பிப்ரவரி 16 வரை அலுவலக நாட்களில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே அலுவலகங்களில் உள்ள முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரிகளை சந்தித்தும்  விளக்கம் பெறலாம். நேரடி விளக்கம் பெற வரும்போது விண்ணப்பதாரர் தனது தேர்வு அழைப்பு கடிதத்தையும் மற்றும் இருமுறை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழையும் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: