செம்பனார்கோயில் அடுத்த வடகரையில் துணை சுகாதார நிலையம் புதிதாக அமைக்கப்படுமா?

செம்பனார்கோயில், ஜன.24:செம்பனார்கோயில் அடுத்த வடகரையில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம் இளையாளூர் ஊராட்சியில் வடகரை கிராமம் உள்ளது. இங்கு கடந்த 1957ம் ஆண்டு வடகரை ஜமாத்தார்களால் அரசுக்கு வழங்கப்பட்ட இடத்தில் கிராம மருத்துவமனையை முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார். இம்மருத்துவமனை 1990ம் ஆண்டு வரை செயல்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின்னர் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு துணை சுகாதார நிலையமாக கிராம செவிலியரைக் கொண்டு செயல்பட்டது.

இங்கு அன்னவாசல், கழனிவாசல், குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்களும் பயன் பெற்று வந்தனர். பின்னர் அந்த கட்டிடம் பழுதடைந்து இடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. அங்கு போதுமான வசதி இல்லாததால் சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவமனை பயன்பாட்டிற்காக அரசுக்கு வழங்கப்பட்ட அந்த இடம், சம்பந்தப்பட்ட துறையினருக்கு பெயர்மாற்றம் செய்யப்படாததால் மருத்துவமனை தரம் உயர்த்தப்படாமல் தற்போது பயன்பாடு இன்றி கேட்பாரற்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். துணை சுகாதார நிலையம் நிரந்தர கட்டிடத்தில் இயங்கவில்லை என்றாலும் கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, தடுப்பூசி போடுதல், வளர் குழந்தைகள் பராமரிப்பு, பிறப்பு இறப்பு பதிவு , கொரோனா கண்காணிப்பு மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் வசதிகளுடன் கூடிய நிரந்தர சுகாதார நிலையம் இல்லாததால் அவசர சிகிச்சை பெற அப்பகுதி மக்கள், 10 கி.மீ தூரத்தில் உள்ள மயிலாடுதுறைக்கோ அல்லது செம்பனார்கோயிலுக்கோ செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்லும் வழியிலேயே குறித்த நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் சிலர் உயிரிழக்கும் சம்பவமும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.  எனவே வடகரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நவீன வசதிகளுடன் நிரந்தரமாக துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: