வீரபாண்டி அருகே 23 பேருக்கு சொந்தமான ரூ.40 கோடி நிலத்திற்கு போலி ஆவணம் தயாரிப்பு

திருப்பூர், ஜன. 22: வீரபாண்டி அருகே 23 பேருக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்த, சென்னையை சேர்ந்த ஏஜெண்டு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் மனு கொடுக்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம், வீரபாண்டி அருகே உள்ள ஜோதிநகரை சேர்ந்த 23 குடும்பத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: வீரபாண்டி ஜோதிநகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது பகுதியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் 23 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறோம். மேலும், சிலர் பனியன் நிறுவனங்களும் நடத்தி வருகிறார்கள். இந்த இடம் மற்றும் பனியன் நிறுவனங்கள், வீடு உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு தற்போது ரூ.40 கோடி ஆகும். இந்நிலையில் சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஏஜெண்டு ராதாகிருஷ்ணன் என்பவர், போலி ஆவணங்களை தயாரித்து எங்களது பகுதியில் 1 ஏக்கர் 30 சென்ட் நிலத்தை 5 பேருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த 1 ஏக்கர் 30 சென்டில் வீடுகள், பனியன் நிறுவனங்களும் உள்ளன. இது குறித்து தெரிந்த நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். மேலும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை. ஏற்கனவே 23 பேரும் வாங்கி பயன்படுத்தி வருகிற வீடு மற்றும் கட்டிடம், பனியன் நிறுவனங்களை போலியாக ஆவணங்கள் தயாரித்து அபகரித்துள்ளனர். மேலும், மீதமுள்ள பகுதிகளையும் கிரையம் செய்வதற்காக உட்பிரிவும் செய்து ஆவணங்களும் தயார் செய்துவைத்துள்ளனர். எனவே போலி ஆவணங்கள் தயாரித்த சென்னையை சேர்ந்த ஏஜெண்டு ராதாகிருஷ்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பத்திரப்பதிவு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது நிலத்தை எங்களுக்கே மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: