விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

விருத்தாசலம், ஜன. 22: கடலூர் மாவட்டத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலம் நகரம் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் அண்டை மாநில பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து வசதிகள் உள்ளது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு, பேருந்து நிலையத்தை அழகுபடுத்தும் நோக்கமாக, பேருந்துகள் உள்ளே செல்லும் பகுதி மற்றும் வெளியே செல்லும் பகுதிகளில் ஆர்ச்சுகள் மற்றும் சுற்றுச் சுவரை ஒட்டி  இரண்டு புறங்களிலும் மண்மேடுகள் அமைக்கப்பட்டு அதில் பூச்செடிகள் வைப்பதற்காக பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மண்மேடுகள் அமைக்கப்பட்டதுடன் மற்ற பணிகள் எதுவும் நடைபெறாமல் அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயன்பாடின்றி இருந்த மண்மேடுகள், சிமெண்ட் கட்டைகள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது. மேலும் அவைகள் பராமரிப்பின்றி இருந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் பயன்பாடின்றி இருந்த மண்மேடுகள் மற்றும் சுவர்கள் அனைத்தும் அகற்றும் பணிகளில் நேற்று நகராட்சியினர் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இடங்களையும் இடித்து அப்புறப்படுத்தினர். இதில் நகராட்சி இளநிலை பொறியாளர் ராமன், வருவாய் ஆய்வர் மணிவண்ணன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் பலர் உடன் இருந்தனர்

Related Stories: