சிராவயல் மஞ்சுவிரட்டு தேதி மாற்றம்

திருப்புத்தூர்: சிராவயலில் ஜன.16ல் நடைபெறும் மஞ்சுவிரட்டு ஜன.17ம் நடைபெறும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார். திருப்புத்தூர் அருகே புகழ்பெற்ற சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3ம் தேதி மாட்டுப்பொங்கல் மறுநாள் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனாவின் மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை வழிப்பாட்டு தலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

இந்நிலையில் வரும் ஜனவரி 16ம் தேதி சிராவயல் மஞ்சுவிரட்டு நடைபெறுவதற்கான கேலரி கட்டுவது, தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடுகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் காவல்துறை ஏடிஎஸ்பி சீனுசாமி தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாடுகளை தொழுவிற்கு கொண்டுவந்து அவிழ்த்து விடவேண்டும் எனவும், காளைகளை பொட்டலில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடக்கூடாது எனவும், மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன் பிசிஆர் பரிசோதனை செய்து இருக்க வேண்டும். அதனுடைய ரிசல்ட் காண்பிக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் தாசில்தார் பஞ்சாபிகேசன், திருப்புத்தூர் டிஎஸ்பி ஆத்மநாபன், திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் சேது, நாச்சியாபுரம் எஸ்.ஐ., சுரேஷ்குமார் மற்றும் மருத்துவர்கள், சிராவயல் கிராமத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்று நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு ஜனவரி 17ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என்று

நேற்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.

Related Stories: