கும்பகோணம் பகுதியில் இரவு நேர ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது

கும்பகோணம், ஜன.8: தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 3வது அலையாக ஒமிக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை கடந்த 5ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.

இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி, பாலக்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் கும்பகோணத்தில் கோயில்கள் அனைத்தும் தமிழக அரசின் ஆணைப்படி திறக்கவில்லை. இதனால் கோயில்களுக்கு வழிபட வரும் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் கும்பகோணம் பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் டிஎஸ்பி அசோகன் தலைமையிலான போலீசார் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Related Stories: