புதுகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 337 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

புதுக்கோட்டை, ஜன. 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி வழி உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கவிதா ராமு துவக்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி வழி உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் முதல் கட்டப்பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கவிதா ராமுவால் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது; புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 121 வாக்குச்சாவடிகளுக்கு 146 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், இரண்டு நகராட்சிகளில் அமைக்கப்பட்டுள்ள 159 வாக்குச்சாவடிகளுக்கு 191 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் என மொத்தம் 337 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதுபோக 324 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 869 வாக்குப்பதிவு கருவிகளும் உபரியாக இருப்பில் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 09.12.2021 அன்று வெளியிடப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலின்படி 1,15,277 ஆண் வாக்காளர்களும், 1,22,576 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,37,873 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) கிருஷ்ணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: