சேத்தியாத்தோப்பு, ஜன. 3: சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையாநத்தம் ஆற்றங்கரை தெருவில் வசிப்பவர் மணி மகன் விஜயகுமார்(30). இவர் தனது குடும்பத்தினருடன் வயலில் களை பறித்து கொண்டிருந்தார். இந்நிலையில், இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் மற்றும் தகவல் அறிந்த விஜயகுமார் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையிலான குழுவினர் வந்தனர். வாகனம் செல்ல முடியாத ஒற்றையடி பாதையில் ஆற்றங்கரையோரம் விஜயகுமார் வீடு இருந்ததால் தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் விஜயகுமார் வீட்டின் அருகில் இருந்தவர்கள் வயல் வெளியில் இருந்த மோட்டார் பம்ப் செட்டை இயக்கி அதில் இருந்து வந்த தண்ணீரின் மூலம் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் வீட்டில் இருந்த ஆவணங்கள், நகை, பணம், உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமானது. சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சேத்தியாத்தோப்பு எஸ்ஐ நடனம், ஏட்டு பத்மநாபன் மற்றும் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.