நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஹீமோபிலியா நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் துவக்கம்

நாமக்கல், டிச.16: நாமக்கல் அரசு மருத்துவமனையில், ஹீமோபிலியா நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையம் துவங்கப்பட்டுள்ளது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ரத்தம் உறையும் தன்மையில்லாத ஹீமோபிலியா நோய்க்கான சிகிச்சை மையம் துவக்க நிகழ்ச்சி, முதல்வர் சாந்தா அருள்மொழி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் ஸ்ரேயா சிங் திறந்து வைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள ₹1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான மருந்துகளை பார்வையிட்டார். மேலும் நோயாளிகளுக்கு ஊசி மூலம் செலுத்துவதற்காக மருந்துகளை செவிலியரிடம் வழங்கினார். மனித உடலில் குருதி (ரத்தம்) உறையாமல் போகும் பரம்பரை நோயான ஹீமோபிலியா நோய் பாதிப்பு, நாமக்கல் மாவட்டத்தில் 5 பெண்கள், 15 குழந்தைகள் உட்பட மொத்தம் 76 பேருக்கு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஹீமோபிலியா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ₹1.22 கோடி மதிப்புள்ள மருந்துகளை முதல்வர் வழங்கியுள்ளார். இதனால், நாமக்கல் மாவட்ட ஹீமோபிலியா நோயாளிகள், தொடர் சிகிச்சைக்காக சேலம் செல்ல தேவை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், துணை கண்காணிப்பாளர் சுரேஷ்கண்ணா, நிலைய மருத்துவ அலுவலர் கண்ணப்பன், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் அன்புமலர், சேலம் ஹீமோபிலியா சங்கத்தலைவர் நடராஜ், நாமக்கல் மாவட்ட ஹீமோபிலியா சுய உதவிக்குழு தலைவர் லோகேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், ஹீமோபிலியா நோயாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: