விக்கிரவாண்டி டோல்கேட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

விக்கிரவாண்டி, டிச. 11: விக்கிரவாண்டி டோல்கேட்டை கடக்க முயன்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5பேர்  அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.பெரம்பலூர் மாவட்டம் கொளப்பட்டியை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (41). இவர் நேற்று முன்தினம் வெளிநாட்டிற்கு சென்ற தனது உறவினரை சென்னை ஏர்போர்ட்டிற்கு சென்று வழி அனுப்பிவிட்டு நேற்று காலை ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். காலை 11.30 மணியளவில் விக்கிரவாண்டி டோல்கேட்டை கார் கடக்க முயன்ற போது என்ஜின் முன்புறம் திடீரென புகைவந்தது. இது குறித்து டோல்பிளாசா ஊழியர்கள் எச்சரித்தவுடன் கொளஞ்சியப்பன் காரை உடனடியாக நிறுத்தினார்.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், காரில் வந்த கொளஞ்சியப்பனின் தாய், தங்கை, அவரது கணவர், மகள் ஆகியோரை கீழே பத்திரமாக இறக்கினார். தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் ராஜவேலு, வேல் முருகன், டோல் பிளாசா பி.ஆர்.ஓ., சொர்ணமணி, பாதுகாப்பு மேலாளர் அசோக்குமார் கொண்ட குழுவினர் உடனடியாக செயல்பட்டு தீ மேலும் பரவாத வகையில் தண்ணீர் பீச்சியடித்து தீயை அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக காரின் முன்புறம் தீப்பற்றி எரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Related Stories: