கே.என்.பாளையம் பளிஞ்சூர் காலனியில் சாக்கடை நீருடன் தேங்கிய மழைநீர் அகற்றம் தற்காலிக வடிகால் அமைப்பு

சத்தியமங்கலம், டிச.8: சத்தியமங்கலம் அருகே உள்ள கே.என். பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்டது பளிஞ்சூர் காலனி. இந்த காலனியில் 100க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக சாலை வசதி மற்றும் வடிகால் வசதி செய்து தரப்படாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்தது. இதனால்  மழை நீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து காலனி பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசியது.

இது குறித்து கிராம மக்கள் கே.என். பாளையம் பேரூர் கழக திமுக பொறுப்பாளர் ரவிச்சந்திரனிடம் முறையிட்டனர். இதைடுத்து அவர் தலைமையில் கட்சியினர் கே.என். பாளையம் பேரூராட்சி அலுவலர்களிடம் சென்று உடனடியாக பளிஞ்சூர் காலனி கிராம மக்களுக்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து நேற்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் பளிஞ்சூர் காலனியில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீர் சேர்ந்து தேங்கியிருந்த பகுதியில் உள்ள கழிவுநீரை அகற்றினர்.

பின்னர் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு சாக்கடை கழிவு நீர் செல்லும் வகையில் தற்காலிகமாக வடிகால் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியினை பேரூர் கழக திமுக பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் கே.என். பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வெங்கிடுசாமி, திமுக நிர்வாகிகள் பெரியசாமி, பழனிச்சாமி, ரஜினித்தம்பி, சேகர், பொன்னுசாமி, பளிஞ்சூர் தம்பி, சவுந்தர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

Related Stories: