கடந்த ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் தேவதானம் கிராம விவசாயிகள் கோரிக்கை

திருவாரூர், டிச. 7: கடந்த ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கக்கோரி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுக்கா தேவதானம் கிராமத்தைச் சேர்ந்த 50 மேற்பட்ட விவசாயிகள் நேற்று கலெக்டர் அலுத்தில் மனு ஒன்றினை அளித்தனர். அதில் கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர்களுக்கு காப்பீடு இழப்பீடு தொகை மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேவதானம் கிராமத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரையில் இழப்பீடு தொகை கிடைக்க வில்லை. உரிய முறையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதற்கான பிரீமிய தொகை செலுத்தி ரசீது வைத்துள்ள போதிலும் காப்பீடு தொகை கிடைக்கவில்லை. எனவே காப்பீடு இழப்பீடு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விவசாயி இருதயதாஸ் என்பவர் கூறுகையில், தேவதானம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கடந்த ஆண்டு நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகைக்காக முறைப்படி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பிரியமிய தொகை செலுத்தி அதற்கான ரசீதும் வைத்துள்ளோம். ஆனால் இது நாள் வரையில் பயிர் காப்பீடு தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை. பயிர் காப்பீடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Related Stories: