கடந்த அதிமுக ஆட்சியில் துவங்கிய முதுகலை பட்டமேற்படிப்பு மையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்கள் போராட்டம்

விழுப்புரம்,  டிச. 7: விழுப்புரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் துவங்கிய  முதுகலைபட்டமேற்படிப்பு மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து  மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.விழுப்புரம் சாலாமேட்டில் கடந்த அதிமுக ஆட்சியில்  திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை பட்டமேற்படிப்பு விரிவாக்க மையம்  துவங்கப்பட்டது. தற்போது, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து  வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவொரு அடிப்படை வசதியும்  செய்து கொடுக்காததை கண்டித்து நேற்று ஆட்சியர் அலுவலகத்தை மாணவ, மாணவிகள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,  இம்மையத்தில் நூலகம், ஆய்வகம் வசதி மற்றும் குடிதண்ணீர் வசதி, கழிவறையில்  தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் கடந்த ஆட்சியில்  ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.கட்டிடங்கள் கட்டியதோடு, அடிப்படை வசதிகளுக்கான  எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இம்மையத்தில் இயக்குனர்  நியமனம் செய்யப்பட்டும் அவர் இன்னும் பொறுப்பேற்காததால் நன்னடத்தை  சான்றிதழ் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழையும் பெற முடியவில்லை என்று மாணவ,  மாணவிகள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தி ஆட்சியரிடம் மனுஅளிக்குமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட  மாணவ, மாணவிகள் ஆட்சியரிடம் மனுஅளித்தனர். மனுவைபெற்றுக்கொண்ட ஆட்சியர்,  இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக  கூறியதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: