ஆரோவில் பகுதியில் சாலை அமைக்க எதிர்ப்பு

வானூர், டிச. 6: வானூர் தாலுகா ஆரோவில் பகுதியில் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஆரோவில் வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் சர்வதேச நகரத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளனர். இதில் ஒரு சிலர் பல ஆண்டுகளாக ஆரோவில்வாசிகளாக தங்கியுள்ளனர். தற்போது ஆரோவில் பவுன்டேஷன் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதியான ஜெயந்திரவி பொறுப்பேற்றவுடன் சில அதிரடி முடிவுகளை எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஆரோவில் பகுதியை மாஸ்டர் பிளான் என்கிற திட்டத்தின்கீழ் கிரீன்பெல்ட் உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அதன்படி 16 மீட்டர் அகலமுள்ள சாலையை அமைத்து வருகின்றனர். இந்த சாலை தற்போது அப்பகுதியில் உள்ள இளைஞர் மையம் அமைந்துள்ள இடத்தின் குறுக்காக செல்ல வேண்டும் என்று அப்பகுதியில் கடந்த 2 தினங்களாக ஆரோவில் அதிகாரிகள் வந்து சர்வே எடுத்துள்ளனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள ஆரோவில்வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை அமைத்தால் ஆரோவில்லின் கோட்பாடுகள் சிதைந்துபோகும், மரங்கள் அதிக அளவில் வெட்டவேண்டிய நிலை ஏற்படும். எனவே மாற்று வழியில் சாலை அமைக்க வேண்டும் என்று நிர்வாகத்தை வலியுறுத்தினார்கள். ஆனால் அதனை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் ஆரோவில் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: