7,500 பேர் ஆர்வமுடன் பங்கேற்பு வடலூரில் வேலைவாய்ப்பு முகாம் 1,500 பேருக்கு பணி நியமன ஆணை

நெய்வேலி, டிச. 6: வடலூரில் நடந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்து 500 பேருக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடலூரில் மகளிர் திட்டம் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 67 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது. வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு துவங்கிய முகாம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்வடிவு வரவேற்றார்.  

 வேளாண் மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமில் தேர்வு பெற்ற 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் ரஞ்ஜித்சிங், கடலூர் ஆர்.டி.ஓ அதியமான் கவியரசு, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் கஸ்பர், அருள், மரியராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 67 நிறுவனங்கள் கலந்து கொண்டு இதுவரை 1500க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதில் சுமார் 7,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த முகாம் மூலம் இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழக அரசும் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது என்றார். இதில் மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் சத்தியநாதன், கடலூர் நகர செயலாளர் ராஜா, கம்மாபுரம் ஒன்றிய செயலாளர் ராயர், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வடலூர் முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: