அதிகாரிகள் சாலையை சீரமைப்பதாக உறுதியளித்ததால் நாற்றுநடும் போராட்டம் ஒத்தி வைப்பு

திருமுருகன்பூண்டி, டிச. 5:  திருப்பூர் மாநகராட்சி 4-செட்டிபாளையம்  ரிங் ரோடு முதல் கூத்தம்பாளையம் பிரிவு வரை குண்டும் குழியுமாக உள்ள  சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி திருப்பூர் வடக்கு ஒன்றிய.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது வார்டு கிளைகள் சார்பில் மக்களைத் திரட்டி 4ம் தேதி (நேற்று) நாற்று நடும்  போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று போராட்டத்தை துவக்க அனைவரும்  திரண்டனர். நாற்று நட ஜேசிபி வாகனங்கள் மூலம் குழி தோண்டினர்.

 அப்போது திருப்பூர் மாநகராட்சி 1 வது மண்டல உதவி ஆணையாளர் சுப்பிரமணியம்,  உதவி பொறியாளர் பிரபாகரன், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் சண்முகவடிவேல் ஆகியோர் போராட்டம் நடக்கும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடனும்  பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறியதாவது:  செட்டிபாளையம், குமரன் காலனி, கூத்தம்பாளையம், அண்ணையபாளையம், ஒட்டபாளையம் பகுதிகளை இணைத்து மூன்று ஆழ்துளை கிணறு அமைத்து  தரப்படும். பாதாள சாக்கடை திட்டப் பணி விரைந்து முடிக்கப்படும். அம்ருத் திட்டக் குடிநீர் குழாய் விடுபட்ட  இடங்களில் முழுமையாக அமைத்துத் தரப்படும்.  

மழைக்காலங்களில் மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் அமைத்து கொடுக்கப்படும். குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்கப்படும். 5 நாட்களுக்குள் இப்பணி மேற்கொள்ளப்படும்.  என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து நாற்று நடும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

  இதனையடுத்து ஜேசிபி வாகனத்தின் மூலம் சாலையை சீரமைக்கும் பணி முழு வீச்சாக நடைபெற்ற வருகிறது. இப்போராட்ட ஆயத்தப்பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் மாரப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒன்றிய குழு உறுப்பினர் கோபால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஸ்குமார், விஜயபுரி கார்டன் கிளைச் செயலாளர் இம்ரான் பாஷா மற்றும் அப்பகுதி பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: