உடுமலையில் கனமழை பஸ் ஸ்டாண்ட் குளமானது

உடுமலை, டிச. 5:  திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சாரல் மழை நீடித்து வருகிறது. குறிப்பாக அமராவதி அணை திருமூர்த்தி அணை ஆகியவற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குவதால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மழை இடி மின்னலுடன் வெளுத்து வாங்கியது.இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டை போல் தேங்கியது. மேலும் தங்கம்மாள் ஓடை, பொள்ளாச்சி சாலை, தாராபுரம் ரோடு, திருமூர்த்தி அணை செல்லும் தளி சாலை, மற்றும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சாக்கடையுடன் கலந்து வீதி எங்கும் பரவி துர்நாற்றம் வீசியது. காந்தி சதுக்கம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் சாக்கடை நீருடன் மழை நீரும் சேர்ந்து தேங்கியதால் பஸ் ஸ்டாண்ட் குளம் போல் காட்சியளித்தது. இதன் காரணமாக பேருந்து ஓட்டுனர்கள் நடத்துனர்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related Stories:

More