மேகதாது அணை ஆய்வுக்குழு கலைப்பு விவகாரம் அதிகார வரம்பை மீறிய தேசிய பசுமை தீர்ப்பாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரம்

புதுடெல்லி:கர்நாடகாவில் ராமநகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாதுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய தடுப்பணையை கட்டுவதற்கு இம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அணை விவகாரம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த சென்னையில் உள்ள தேசிய தென்மண்டல பசுமை தீர்பாயம், மேகதாதுவில் சட்டத்திற்கு புறம்பாக கர்நாடகா அரசு அணை கட்டுகிறதா? என்று ஆய்வு செய்வதற்காக 13 பேர் கொண்ட குழுவை அமைத்து  கடந்த ஏப்ரல் 15ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த 13 பேர் ஆய்வுக்குழுவை கலைக்க உத்தரவிட்டது இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ‘தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் 13 பேர் ஆய்வுக்குழுவை அமைத்ததற்கான அதிகாரம் அதற்கு உண்டு. ஆனால், மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வுக்குழுவை கலைக்கும் உத்தரவை பிறப்பிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை. அதனால், அதன் பிறப்பித்த தடையை ரத்து செய்ய வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் இப்போது நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. இது போன்ற விவகாரங்களில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரம் உண்டா? என்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும்,’ என கூறினர்….

The post மேகதாது அணை ஆய்வுக்குழு கலைப்பு விவகாரம் அதிகார வரம்பை மீறிய தேசிய பசுமை தீர்ப்பாயம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: