திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவியார் ஞானப்பால் வழங்கிய திருமுலைப்பால் விழா சீர்காழியில் கோலாகலம்

சீர்காழி, ஏப்.19: சீர்காழியில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற  சட்டைநாதர் சுவாமி கோயிலில் சிவபெருமான்  பிரமபுரீசுவரர், தோணியப்பர் மற்றும்  சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். காசிக்கு இணையாக இங்கு மட்டுமே அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு பார்வதி ஞானப்பால் ஊட்டியதால் “தொடுடைய செவியன்” என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை இங்கு பாடினார். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருமுலைப்பால் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருமுலைப்பால் திருவிழா தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை தனி சன்னதியில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேக, ஆரதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஓதுவார்கள் தேவாரம் பாட திருஞான சம்பந்தர் பல்லக்கில் வந்து பிரம்ம தீர்த்தகரையில் எழுந்தருளினார். தருமபுர ஆதினம் முன்னிலையில் உமையம்மை பிரம்மதீர்த்த குளக்கரையில் புஷ்பபல்லக்கில் எழுந்தருளி திருஞான சம்பந்தருக்கு தங்க கின்னத்தில் ஞானபால் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைதொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி திருஞானசம்பந்தருக்கு காட்சி அளித்தனர். அப்போது சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தருக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் மா,பலா,வாழை பழங்களை சர்க்கரை கலந்த பாலில் கலந்து சுவாமி, அம்பாளுக்கு நைவேத்தியம் செய்து தங்களது குழந்தைகளும் ஞானம் பெறவேண்டும் என பிராத்தனை செய்தனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் குறைந்த அளவே கலந்து கொண்டனர்.

Related Stories:

More