போச்சம்பள்ளி அருகே குடிநீர் விநியோகம் கேட்டு பெண்கள் சாலை மறியல்

போச்சம்பள்ளி, ஏப்.17: போச்சம்பள்ளி அருகே குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து, பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பெருகோபனப்பள்ளி அண்ணா நகர் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை கிருஷ்ணகிரி- மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். பின்னர், காலி குடங்களுடன் திடீரென மறியலில் குதித்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பஞ்சாயத்து தலைவர் முரளி, விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், போச்சம்பள்ளி போலீசாரும் சம்பவ இடம் சென்று, ஓரிரு நாட்களில் குடிநீர் சப்ளையை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதன்பேரில், போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories:

>