தமிழ்புத்தாண்டையொட்டி பூக்கள், பழங்கள் விற்பனை அமோகம்

கோவை, ஏப். 14: உலகம் முழுவதும் தமிழர்களால் தமிழ்புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதேபோல் கேரளாவில் இன்று சித்திரை விசு கொண்டாடுகின்றனர். தமிழ்புத்தாண்டு மற்றும்  சித்திரை விசுவையொட்டி கோவை மார்க்கெட்டுகளில் பழங்கள்,  பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்தது. கோவையில்  நேற்று மல்லிகை பூ கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையானது.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் பூ வியாபாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் வெயில் தாக்கம் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. பூ மார்க்கெட்டிற்கு இன்று (நேற்று) 25 டன்கள் வரை பூக்கள் விற்பனைக்கு  வந்தது. ஒரு கிலோ முல்லை பூ ரூ.600, ரோஜா ரூ.160 முதல் ரூ.200,  ஹைபிரிட் ரோஜா ரூ.300, செவ்வந்தி ரூ.240 முதல் ரூ.260 மல்லிகை பூ ரூ. 500 முதல் ரூ.700 வரை  விற்பனையானது. மேலும் செண்டுமல்லி ரூ.40, துளசி ரூ.50, மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.30, தாமரை பூ ஒன்று ரூ.10 விற்கப்பட்டது. கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் பூ வியாபாரம் நடைபெற்றது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

இதேபோல் பழங்களின் விலையும் அதிகரித்தது. இது குறித்து பழ  வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘‘மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில்  இருந்து கோவைக்கு பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.  சித்திரை விசுவையொட்டி ஒரு கிலோ ஆப்பிள் ரூ.200, மாதுளை  ரூ.220, கொய்யா ரூ.80, ஆரஞ்ச் பழம் ரூ.120-க்கு விற்கப்பட்டது. இதேபோல் சாத்துக்குடி ரூ.100, மாம்பழங்கள் ரூ.120 முதல் ரூ.160  வரையும், திராட்சை ரூ.160, வெள்ளரி பழம் ரூ.40 என விற்பனையானது’’ என்றனர்.

Related Stories:

>