கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தென்காசியில் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

தென்காசி, ஏப். 13: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தென்காசியில் அதிகாரிகளுடன் கலெக்டர் சமீரன் ஆலோசனை நடத்தினார்.  தென்காசி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சமீரன், தென்காசி மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தலைமை வகித்தனர். இதில் அனுஜார்ஜ் பேசுகையில் ‘‘கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை மீறுவோர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். பொதுஇடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதையும் சமுக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.  கடைகளில் முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு பதாகையை வைக்க வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை மருத்துவத்துறையுடன் இணைந்து செயல்படுத்த சம்பந்தப்பட்ட  வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அத்துடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

 பின்னர் புளியரை சோதனைச்சாவடி, தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார மையத்தில் நடந்துவரும் கொரோனா தடுப்பூசி முகாமையும், ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் இயங்கி வரும் கொரோனா பராமரிப்பு மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  கூட்டத்தில் எஸ்பி சுகுணாசிங், டிஆர்ஓ ஜனனி சவுந்தர்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், சுகாதாரப்பணிகளுக்கான இணை இயக்குநர் நெடுமாறன், துணை இயக்குநர் அருணா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: