இறந்த கோழிகளை வீசியெறியும் விவகாரம் நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு

தாராபுரம், ஏப். 10:  தாராபுரம் அருகே இறந்த கோழிகளை பண்ைணை நிர்வாகத்தினர் காட்டில் வீசுவதால் அதை சாப்பிட வரும் நாய்கள் மாடு, ஆடுகளை கடித்துக் கொன்றன. இதனால் பாதித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

தாராபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டி அருகே உள்ளது சின்னக்கம்பாளையம். இங்கு உள்ள தனியாருக்கு சொந்தமான முட்டை உற்பத்தி கோழிப்பண்ணையில் உயிரிழக்கும் கோழிகளை மண்ணில் புதைக்காமல் மேய்ச்சல் காடுகளில் வீசி எறிவதால் கால்நடைகள் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் இறந்த கோழிகளை தின்ன வரும் தெருநாய் கூட்டங்களால் விவசாயிகள் வளர்க்கும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை நாய்கள் கடித்து கொல்வதாகவும் புகார் எழுந்தது.

 எனவே சர்ச்சைக்குரிய கோழிப்பண்ணைக்கு தடை விதிக்கக் கோரி விவசாயிகள் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று தாராபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர்

  இதனைத் தொடர்ந்து தாராபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிராம மக்கள் கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது

  தொடர்ந்து காரசாரமாக 4 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கோழிப்பண்ணை நிர்வாகத்தினர் இறந்த கோழிகளை அரசின் வழிகாட்டுதலின்படி எரித்து சாம்பலாக்க வேண்டும். கோழி கழிவுகளை தின்ன வரும் தெரு நாய்கள் கடித்து உயிரிழந்த விவசாயிகளின் வளர்ப்பு ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை பண்ணை நிர்வாகம் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். காற்றில் பறக்கும் கோழி இறகுகளால் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க பண்ணையை சுற்றிலும் நிழல் வேலி அமைக்க வேண்டும். என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பண்ணை நிர்வாகத்திடமும் விவசாயிகளிடமும் கையொப்பம் பெறப்பட்டு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டது.

விவசாயிகளின் போராட்டத்தில் முன்னிலை வகித்த தாராபுரம் ஊராட்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினர் தெய்வசிகாமணி கூறியதாவது:

கோழிப் பண்ணை நிர்வாகம் பேச்சுவார்த்தை உடன்படிக்கை படி நடந்து கொள்ளாவிட்டால் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போராட்டம் மீண்டும் விரிவாக நடத்தப்படும். ஒரு வார காலத்துக்குள் வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீட்டை கோழிப்பண்ணை நிர்வாகம் வழங்க ஒப்புதல் கூறியுள்ளது. இதனை ஒப்பந்தப்படி நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம், என்றார்

Related Stories: