ஓபிஎஸ் மகன் கார் மீது கல்வீச்சு சம்பவத்தில் அமமுக நிர்வாகி கைது; கட்சியினர் மறியல்

போடி, ஏப். 9: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடந்தபோது, போடி அருகே உள்ள பெருமாள்கவுண்டன்பட்டியில் ஓபிஎஸ்சின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத், தனது ஆதரவாளர்களுடன் 2 கார்களில் வந்தார். அப்போது அவரது கார் மீது, சிலர் கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து அதிமுகவினர் வீட்டில் எம்பி, அவரது ஆதரவாளர்கள் தஞ்சமடைந்தனர். இது தொடர்பாக எம்பி ரவீந்திரநாத்தின் டிரைவர் பாண்டியன், போடி தாலுகா காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். இதையடுத்து கல்வீச்சில் ஈடுபட்டதாக அமமுகவை சேர்ந்த பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, கார்த்திக் உள்ளிட்ட 17 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் மாயி என்பவரை போடி போலீசார் நேற்று காலை கைது செய்தனர். இந்நிலையில், மாயி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ருமாள்கவுண்டன்பட்டியில் அமமுக கட்சியினர் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயியை விடுவிக்கக் கோரி கோஷம் எழுப்பினர். புறநகர் எஸ்ஐ வேலுமணி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். அரை மணி நேரம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: