மலைக்கிராமங்களுக்கு டீசல், பெட்ரோல் கொண்டு செல்ல தடை வனத்துறை சோதனை சாவடியை பொதுமக்கள் முற்றுகை

வருசநாடு, ஏப். 9: கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராமங்களுக்கு டீசல், பெட்ரோல் கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்ததை தொடர்ந்து, வனத்துறை சோதனைச் சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடமலை-மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேகமலை ஊராட்சி பகுதிகளில் அரசரடி, வெள்ளிமலை, பொம்மராஜபுரம் இந்திராநகர், நொச்சிஓடை உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன். இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மேலும் இங்கு விளைகின்ற பீன்ஸ், எலுமிச்சை, அவரை, தக்காளி, மிளகாய், கொட்டை முந்திரி, ஏலக்காய், இலவம் பஞ்சு, மிளகு உள்ளிட்ட விளைபொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதமாக மேகமலை வனத்துறை அதிகாரிகள் மலைக்கிராம பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து, அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மலைக்கிராமத்திற்கு லோடு ஏற்றும் சரக்கு வாகனத்தில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், சோலார், விளக்குகள், உரம்மூட்டை உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் கொண்டு சென்றனர். ஆனால், மேகமலை மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் டீசல், பெட்ரோல், பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என சரக்கு வாகனத்தை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர், இத்தகவல் அறிந்து மேகமலை ஊராட்சி மன்ற தலைவர் பால்கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வனத்துறை அதிகாரிகள் டீசல், பெட்ரோல், கொண்டு செல்வதற்கு அனுமதி தர மாட்டோம் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் வனச்சரக சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர், கோரையூத்து கிராமத்தில் கூடிய பொதுமக்கள், இது தொடர்பாக கலெக்டர், தேனி மாவட்ட வன உயிரினக் காப்பாளரை நேரில் பார்த்து கிராம முக்கிய நிர்வாகிகள் சார்பில் மனு அளித்து விளக்கம் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் மலைக்கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: