*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
திருச்செங்கோடு : திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தின் தலைநகராகவும், ஒரு பெரிய சாலை சந்திப்பாகவும் விளங்குகிறது. சேலம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், ஜேடர்பாளையம், இறைய மங்கலம் பகுதியில் இருந்து வரும் சாலைகள், திருச்செங்கோடு நகரில் கூடுகிறது.
இங்கு ஜவுளித்தொழில், வாகனங்களுக்கு பாடிகட்டும் தொழில், லாரித்தொழில், ரிக் தொழில் நன்கு செழித்து வளர்வதால் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. திருச்செங்கோடு வட்டாரத்தில் அதிகமான தனியார் பள்ளி, கல்லூரிகள் இருப்பதால் அதிக வாகனங்கள் மாணவ, மாணவிகளுக்காக இயக்கப்படுகின்றன. கிழக்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கேரளா செல்ல திருச்செங்கோடு வழியாகவே செல்ல வேண்டும்.
இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நகரில் உள்ள நான்கு ரத வீதிகளில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், நகை மற்றும் ஜவுளிக்கடைகள், வங்கிகள் உள்ளதால் டூவீலர்கள், கார்கள் ரத வீதிகளில் நிறுத்தப்படுவதால் சாலைகள் குறுகி விடுகின்றன. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சாலைகளே இப்போதும் வாகனப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் இங்குள்ளது. அமாவாசை, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும், பௌர்ணமி கிரிவலம் செல்லும் நாட்களில் இந்த கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாக இருக்கும். முகூர்த்த நாட்களில் மலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடப்பதால் அன்றைய தினம் நாமக்கல் சாலையில் அதிக வாகனங்கள் செல்லும். போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல இயலாத சூழல் நிலவுகிறது.
கொக்கராயன்பேட்டை சாலை அகலப்படுத்தப் பட்டுள்ளதால் ஈரோடு, கோவை செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்வதால் வாகன நெரிசல் சற்று குறைந்துள்ளது. நான்கு ரத வீதிகளிலும் கார்கள், டூ வீலர்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் நெரிசல் அதிகமாகிறது. நாமக்கல்லை போல நகருக்கு வெளியே புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவானது.
ஆனால் இடம் தேர்வு செய்வதில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் புதிதாக பஸ் நிலையம் அமைக்கும் பணி நின்று விட்டது. வாகன போக்குவரத்து நெரிசலின் மையமாக மேற்கு ரத வீதி உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காவல்துறை சென்டர் மீடியன்களை அகற்றியது. இதனால் நெரிசல் குறைந்து வாகனங்கள் சுலபமாக செல்ல முடிந்தது.
தற்போது, காவல்துறை அண்ணா சிலையில் இருந்து ஈரோடு சாலை சந்திப்பு வரை சென்டர் மீடியன்களை வைத்துள்ளது. இதனால் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதிகளுக்கு செல்பவர்கள் சின்ன ஓங்காளியம்மன் கோவிலிருந்து சென்டர் மீடியன்களை கடந்து சுற்றிச்செல்ல வேண்டியுள்ளது. அனைத்து வாகனங்களும் சுற்றிச்செல்ல வேண்டி இருப்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. நடநது செல்பவர்கள் கூட சுற்றித்தான் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் நேரமும் வீணாகிறது. சென்டர் மீடியன்களை அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள் கருத்தாகும். வாகன போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தலையீடு இன்றி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் அருண்ராஜ் முயற்சி எடுத்து, திருச்செங்கோடு நகரின் வாகன நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
