திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருச்சி: சமயபுரம் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நள்ளிரவில் கோர விபத்து ஏற்பட்டது. அங்கு கார் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், 9 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.7 பேர் படுகாயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபுரம் பகுதியைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என மொத்தம் 10 பேர், தஞ்சாவூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு, சமயபுரம் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்தபோது இந்த விபத்து நேரிட்டது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகே பள்ளிவடை என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தபோது, கோயில் வழித்தடமான இடதுபுற சர்வீஸ் சாலையில் செல்லாமல் தவறுதலாக நேராகச் சென்ற கார், மீண்டும் ரிவர்ஸ் வரும்போது விபத்து நேர்ந்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மீது, சென்னை நோக்கிப் பின்னால் வந்துகொண்டிருந்த ‘கம்ஃபோர்ட் டிராவல்ஸ்’ (Comfort Travels) நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார் ஆம்னி பேருந்து பலமாக மோதியது. இந்த அடுத்தடுத்த மோதல்களால் காரின் பின்பகுதி முற்றிலும் நொறுங்கிச் சேதமடைந்ததுடன், காரில் இருந்தவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

காரின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள் விபத்தின் இடிபாடுகளில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்களும் சமயபுரம் காவல்துறையினரும் இணைந்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாண்டியன், தனலட்சுமி மற்றும் 9 வயது சிறுவன் ஆகிய 3 பேரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மற்ற 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: