ஆர்டிஐ மனுவால் வந்தது அடுத்த சர்ச்சை: என் சர்டிபிகேட்டை காட்ட நான் தயார் பேரரசர் தன் டிகிரியைக் காட்டுவாரா? அபிஜித் தீப்கே கேள்வியால் சிக்கித்திணறும் பா.ஜ

புதுடெல்லி: என் சர்டிபிகேட்டை காட்ட நான் தயார். பேரரசர் தன் டிகிரியை காட்டுவாரா என்று அபிஜித் தீப்கே எழுப்பிய கேள்வி பா.ஜவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி போராட்டத்தால் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு எதிராக பா.ஜ கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி மாணவர்கள் போராட்டத்தை வழிநடத்தி முன்னெடுத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அமெரிக்காவிற்குச் சென்று படிக்க பணம் எப்படி கிடைத்தது? அவர் வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுதான் இந்தப் போராட்டத்தை நடத்தினார்’ என பா.ஜ வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஐ ஆர்வலர் அமித் திவாரி, மகாராஷ்டிர தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் ஓய்வுபெற்ற இளநிலைப் பொறியாளரான தீப்கேவின் தந்தை பகவான்ராவ் தீப்கேவின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி மகாராஷ்டிரா அரசு உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். மாதத்திற்கு சுமார் 60,000 முதல் 65,000 வரை சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரால், தனது குழந்தைகளை உயர்கல்விக்காக அமெரிக்காவிற்கு எப்படி அனுப்ப முடிந்தது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த ஆர்.டி.ஐ குறித்து வீடியோ வெளியிட்ட அபிஜித் தீப்கே, ‘பாஜவைச் சேர்ந்த ஒரு தொண்டர் என் மீது ஆர்.டி.ஐ தாக்கல் செய்திருப்பதை இப்போதுதான் பார்த்தேன்.

நான் எனது கல்வியை எவ்வாறு முடித்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார். நான் என் கல்விச் சான்றிதழையும், கல்விக்கான உதவித்தொகைப் பெற்ற சான்றிதழையும் காட்டத் தயார். அதேபோல உங்கள் பேரரசர் தன் உண்மையான டிகிரி சான்றிதழைக் காட்டுவாரா? எனக்கு புரியவில்லை, இந்த மக்களுக்குக் கல்வியின் மீது ஏன் இவ்வளவு பிரச்னை என்று. ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பையன் பாஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்துவிட்டு வந்தால், இவர்களுக்கு ஏன் இவ்வளவு வலி ஏற்படுகிறது? நீங்கள் ஏன் கல்விக்கு இவ்வளவு எதிராக இருக்கிறீர்கள்?. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகை மற்றும் கல்விக் கடன் மூலமே எனது உயர்கல்வி சாத்தியமானது.

எனது கல்விக்கான நிதியை பாஸ்டன் பல்கலைக்கழகம் வழங்கிய உதவித்தொகையே பூர்த்தி செய்தது. மேலும், நான் சில கல்விக் கடன்களையும் வாங்கியுள்ளேன், அதை நான் இப்போது திருப்பிச் செலுத்த வேண்டும். மக்கள் இந்த அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்பும்போதெல்லாம், அவர்கள் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றை அனுப்பத் தொடங்குகிறார்கள். அவர்கள் என் வீட்டிற்கு வந்து விசாரிக்கட்டும். எனது கடிதங்களைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் பிரதமர் அமலாக்கத் துறையை அனுப்பினால், அவரும் தனது பட்டச் சான்றிதழை அனுப்பி அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும். எனது பட்டம் உண்மையானது; மோடியின் பட்டமும் உண்மையாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு கூறினார். அபிஜித் தீப்கேவின் இந்த கேள்வி பா.ஜவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

* காலையில் ஒருவருக்கு வாக்களித்தால் மாலையில் வேறு அரசு அமைகிறது

அபிஜித் தீப்கே கூறுகையில்,’தற்போதுள்ள அரசியல் கட்சிகள் மீது ஊடகங்களுக்கு ஏமாற்றம் இருப்பதாக நான் உணர்கிறேன். தற்போதைக்கு அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் எண்ணம் எதுவும் எங்களிடம் இல்லை; இப்போதைக்கு இதை ஒரு மக்கள் இயக்கமாகவே வைத்திருக்க விரும்புகிறோம். வாக்குகள் திருடப்படும் நிலையில், அரசியல் கட்சியாக மாறி என்ன பயன்? காலையில் ஒருவருக்கு வாக்களித்தால், மாலையில் வேறொருவரின் அரசாங்கம் அமைகிறது என்ற நிலை இருப்பதால், மக்கள் அரசியலின் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுகிறார்கள். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை ஏவி கட்சிகள் உடைக்கப்படும் சூழலில், அரசியல் கட்சியாக உருவாவதால் என்ன பயன்?’ என்றார்.

* மகாத்மா காந்தி இருக்கும்போது வங்கதேசம், நேபாளத்தை நாம் பார்க்கத் தேவையில்லை

உலகையே ஊக்குவிக்கும் மகாத்மா காந்தியின் பாரம்பரியம் இந்தியாவிடம் இருக்கும்போது, ​​போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வங்கதேசம் அல்லது நேபாளத்தை உற்றுநோக்க வேண்டிய அவசியமில்லை என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறினார். அவர் கூறுகையில்,’ வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடைபெறும் போராட்டங்களை வைத்து எங்களை இழிவுபடுத்த முயற்சிக்கிறார்கள். நாங்கள் வேறுபட்டவர்கள்.

நாங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதை டெல்லியில் நடந்த சமீபத்திய போராட்டத்தின்போது நிரூபித்தோம். வங்கதேசம் மற்றும் நேபாளப் போராட்டங்களுடன் ஒப்பிடுவது எங்களை இழிவுபடுத்தவே பயன்படுத்தப்படுகிறது. போராட்டங்களுக்கான உத்வேகத்தை உலகமே யாரிடமிருந்து பெறுகிறதோ, அந்த மகாத்மா காந்தி நம்மிடம் இருக்கும்போது, ​​நாம் வங்கதேசம் அல்லது நேபாளத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

ஒவ்வொரு தேர்தலிலும் கல்வியே முதன்மையான விவாதப் பொருளாக இருக்க வேண்டும். தேர்தலில் கல்வியை முக்கிய அஜெண்டாவாக மாற்றவில்லை என்றால், நீங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை என்று அர்த்தம். கல்வி என்பது நாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு. ஒரே இரவில் (மாநில) அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான பணம் அவர்களிடம் (ஆளும் கட்சியிடம்) இருக்கிறது. நூற்றுக்கணக்கான கோடி ரூபாயைச் செலவழித்து எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடிகிறது;

ஆனால் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்று வரும்போது மட்டும் விதிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அரசு எங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் நாங்கள் மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்குவோம். நாடாளுமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களில் கூட தரக்குறைவாகப் பேசும் பாஜக தலைவர்களின் நிலைக்கு ஜென் ஸி தலைமுறையினர் தரம் தாழ்ந்துவிடக் கூடாது. குண்டர்களுக்கும் நமக்கும் இடையே ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் எப்போதும் இருக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: