புதுடெல்லி: டெல்லியில் ஜந்தர் மந்தருக்கு பதிலாக வேறொரு இடத்தை போராட்டத்துக்கு தேர்வு செய்ய கோரும் வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
“டெல்லியின் மையப்பகுதியான ஜந்தர் மந்தரில் நடத்தப்படும் போராட்டங்களால் உள்ளூர் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் பாதிக்கப்படுகிறது. எனவே போராட்டங்களை நடத்த மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்” என சதீஷ் சந்த் கவுசிக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மற்றும் நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி, வி.மோகனா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். அப்போது, “ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்கும்போது உள்ளே வருவதிலும், வௌியே செல்வதிலும் உள்ள சிக்கல்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் போன்றவை பாதிக்கப்படுவது உள்ளிட்ட கவலைகளை இந்த மனு எழுப்பி உள்ளது.
இதனால் ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்த பொருத்தமான இடமில்லை என இந்த பொது நல மனு கூறுகிறது. இது முக்கியமான ஒன்று என நான் நினைக்கிறேன். எனவே, இந்த விவகாரம் குறித்து , தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து உரிய அறிவுறுத்தல்களையும், ஒன்றிய அரசிடமிருந்து பதிலையும் பெற வேண்டும்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டதுடன், மேலும் இந்த வழக்கை தனியாக பட்டியலிட்டு விசாரிக்க உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்தார்.
