பலத்த சூறை காற்றுடன் குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு

*பெருஞ்சாணி அணை நீர் மட்டம் உயர்வு

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பலத்த சூறைகாற்றுடன் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு வளி மண்டலத்தில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த இரு நாட்களாக பலத்த சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.

நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை இருந்தது. மார்த்தாண்டம், குழித்துறை, தக்கலை, காட்டாத்துறை, அழகிய மண்டபம், சாமியார்மடம், பளுகல், புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை இருந்தது.

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து குளிர்ந்த காற்றும் வீசியது. கன்னியாகுமரியிலும் நேற்று பலத்த கடல் காற்று இருந்தது. மலையோர பகுதிகளிலும் நேற்று சாரல் மழை இருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 30.61 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1062 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 453 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 62.1 அடியில் இருந்து 63.25 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 1,482 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிற்றார் 1, 11.87 அடியாகவும், சிற்றார்2, 11.97 அடியாகவும் உள்ளன. பொய்கை 15.5 அடியாகவும், மாம்பழத்துறையாறு 34.78 அடியாகவும் இருந்தது.

மழையை பொறுத்தவரை சிவலோகம் (சிற்றார் 2) பகுதியில் 4 மில்லி மீட்டர், சிற்றார் 1, 4 மில்லி மீட்டர், பேச்சிப்பாறை 2.4 மில்லி மீட்டர், குளச்சல் 2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இரணியலில் 2, பெருஞ்சாணியில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. பல்வேறு இடங்களில் சூறை காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தன.

ஆரல்வாய்மொழி காவல் நிலைய வளாகத்தில் நின்ற மரம் முறிந்து விழுந்து மின் கம்பம் முறிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்பட வில்லை. மின் வாரிய பணியாளர்கள் வந்து, அறுந்து விழுந்த மின் ஒயர்களை சரி செய்தனர். காவல் நிலையத்தில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த மழை காரணமாக திற்பரப்பில் நீர் வரத்து அதிகரித்தது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வந்திருந்தனர்.

படகு சேவை தாமதம்

வார விடுமுறையையொட்டி நேற்று காலை முதல், அதிகளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். காலை 8 மணியளவில் கன்னியாகுமரி கடலில் திடீரென நீர்மட்டம் தாழ்ந்தது. ஆகவே வழக்கமான நேரத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.

இதன் காரணமாக அலுவலக கேட் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். படகு சேவை நிறுத்தத்தால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு பிறகு கடலில் நீர் மட்டம் சீரான பின்னர் படகு சேவை தொடங்கியது.

Related Stories: