இலங்கை கடற்படை சிறைபிடித்த தமிழக மீனவர்களை மீட்டுத்தர வேண்டும்: நிர்மலா சீதாராமனிடம் பாஜவினர் நேரில் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரை மீட்டு தர வேண்டும் என நிர்மலா சீதாராமனிடம் பாஜவினர் நேரில் வலியுறுத்தினர். அரசுமுறை பயணமாக சென்னை வந்துள்ள ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜ மாநிலச் செயலாளரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சதீஷ் குமார் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது கோரிக்கை கடிதம் ஒன்றை வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 469 விசைப்படகுகளில், மீனவர்கள் கடந்த 22ம் தேதி அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் 9 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 9 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது உடைமைகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மாலத்தீனரார், கயாஸ், செந்தில், கிரித்திசன், பிரவீன், அருள்போலா, சவரி வினோதின், தேவசகாயம், இன்பென்ட் பிரசாத் ஆகிய 9 மீனவர்களையும் விடுவிக்கவும், அவர்களது உடைமைகளையும் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை கவனமாக கேட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடி, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். சந்திப்பின் போது மீனவரணி முன்னாள் மாநில துணைத் தலைவர் கொட்டிவாக்கம் மோகன் உடனிருந்தார்.

Related Stories: