யுஜி மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தாமதத்தால் இன்ஜினியரிங் கல்லூரியில் ‘சீட்’ பிடித்து காத்திருக்கும் மாணவர்கள்: ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் பெரும் தவிப்பு

புதுடெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தாமதமாவதால் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை பிடித்து மருத்துவ மாணவர்கள் காத்திருக்கும் புதிய சூழல் உருவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட இளநிலை நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில், மறுதேர்வு மற்றும் மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டதால் உயர்கல்வி சேர்க்கை கவுன்சிலிங் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கும் கலந்தாய்வு, இந்தாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை.

ஆனால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் கடைசி வாரத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், எம்பிபிஎஸ் படிக்க விரும்பும் மாணவர்கள் மாற்று ஏற்பாடாக பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக சேர்ந்து இடங்களை பிடித்து வைத்துள்ளனர். வழக்கமாக பொறியியல் கல்லூரிகளில் சுமார் 10 சதவீதம் இடங்களை மருத்துவ கனவுடன் இருக்கும் மாணவர்களே தற்காலிகமாக கைப்பற்றுகின்றனர்.

மருத்துவக் கலந்தாய்வு தாமதமாவதால் இந்த மாணவர்கள் பொறியியல் இடங்களை நீண்ட காலம் தங்களது வசம் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலி இடங்களை நிரப்ப பொறியியல் கல்லூரிகள் கூடுதல் கவுன்சிலிங்களையும், கடைசி நேர நேரடி சேர்க்கை சுற்றுகளையும் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. இது குறித்து அமிட்டி பல்கலைக்கழகத்தின் சேர்க்கை பிரிவு துணை இயக்குநர் சுஷ்மா எஸ் ரவாத் கூறுகையில், ‘இந்த காலதாமதம் மாணவர்களுக்கும் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மையையும், கடுமையான மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார். மேலும், ராஞ்சி பல்கலைக்கழக துணைவேந்தர் சரோஜ் சர்மா தெரிவிக்கையில், ‘மருத்துவப் படிப்பை முதன்மை விருப்பமாக கொண்ட பல மாணவர்கள் இந்த தாமதம் காரணமாக பொறியியல் இடங்களை முன்பதிவு செய்து வைத்துள்ளனர்’ என்று குறிப்பிட்டார்.

மருத்துவப் படிப்பில் நிலவும் குழப்பம் காரணமாக, மாணவர்கள் பயோடெக்னாலஜி போன்ற உயிரியல் அறிவியல் சார்ந்த மாற்றுப் பாதைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக பிடெக் பயோடெக்னாலஜி படிப்புகளில் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேவேளையில், இந்த தாமதத்தால் பெரிய அளவில் பாதிப்பிருக்காது என சில கல்வி நிறுவனங்கள் கருதுகின்றன.

வேலூர் விஐடி பல்கலைக்கழக சேர்க்கை இயக்குநர் எஸ் சசிகுமார் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தில் பயோடெக்னாலஜி, ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பயோ சார்ந்த பிடெக் படிப்புகளிலிருந்து நீட் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் செல்ல விலகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார். டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக பிடெக் சேர்க்கைக் குழுவின் தலைவர் ராஜீவ் சவுத்ரி கூறுகையில், ‘மருத்துவ படிப்புகளுக்காக பிடெக் படிப்புகளில் இருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கை வழக்கமாக குறைவாகவே இருக்கும், இந்த ஆண்டும் அதில் பெரிய மாற்றம் இருக்காது’ என்று கூறினார்.

Related Stories: