நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வினாத்தாள் கசிவு தடுப்பு சட்ட திருத்தம் அமலானது: ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்தார்

 

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வினாத்தாள் கசிவு தடுப்பு சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, 2024ல் நிறைவேற்றப்பட்ட பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதாவை மேலும் கடுமையாக்க ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தது.

இந்த மசோதா மீது நீண்ட விவாதம் நடத்தப்பட்டு இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்ட திருத்தத்திற்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக ஒன்றிய சட்ட அமைச்சகம் நேற்று முன்தினம் தேதியிட்டு வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இந்த சட்ட திருத்த மசோதா அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இனி வினாத்தாள் கசிவு அல்லது தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணைகள் 2 மாதத்தில் முடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தண்டனைகளை அதிகரிக்கவும் மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

Related Stories: