தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி பிரச்னையே முட்டுக்கட்டை நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத மாவட்ட தலைவர்களுக்கு காங்கிரசில் இனி இடமில்லை: பயிற்சி முகாமில் ராகுல்காந்தி எச்சரிக்கை

 

சென்னை: தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த 23ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.பயிற்சி முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, டெல்லியில் இருந்து நேற்று காலை 7.15 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி, தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள் பெ.விஸ்வநாதன், ராஜேஷ்குமார், மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, ெசார்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தணிகாச்சலம், அருள் பெத்தையா, எம்.எஸ்.காமராஜ், எஸ்.ஏ.வாசு, எம்பிக்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மருத்துவர் அணி மாநில தலைவர் கலீல் ரகுமான் மற்றும் பொறுப்பாளர் தி.நகர் ராம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் தாம்பரம் நாராயணன் மற்றும் நிர்வாகிகள் வில்லிவாக்கம் சுரேஷ் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராகுல் காந்தியின் கார், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஜிஎஸ்டி சாலையில், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கேளம்பாக்கம் சாலையில் சென்று, அதன் பின்பு ஓஎம்ஆர் சாலை வழியாக, மாமல்லபுரம் சென்றார். இதையடுத்து, ராகுல் காந்தியின் கார் சென்ற ஜி.எஸ்.டி சாலை, வண்டலூர்- கேளம்பாக்கம் சாலை, ஓஎம்ஆர் சாலை ஆகிய பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏற்கனவே, காவிரி நீர் விவகாரத்தில் எதிர்கட்சிகள் சில ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்போவதாக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் ராகுல்காந்தி செல்லும் வழி எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மால்லபுரத்தில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது மாவட்ட தலைவர்களின் குடும்பத்தினருடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். பயிற்சி முகாமில், ஒரு மாவட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், 50 ஆண்டுகால காங்கிரசின் வரலாறு குறித்தும், காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய திட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து முழுமையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதியாக, நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்து கொண்ட 3 மாணவர்களின் குடும்பத்தினரை வரவழைத்து ஆறுதல் கூறி, விரைவில் உங்கள் வீடுகளுக்கே நேரில் வந்து அனைவரையும் சந்தித்து பேசுவதாக உறுதியளித்தார். முன்னதாக, மாமல்லபுரம் வரும் வழியில் பட்டிப்புலம் பகுதியில் ராகுல் காந்தி காரில் இருந்து கீழே இறங்கி குழந்தைகளுக்கு சாக்லெட் வழங்கி, ஒரு குழந்தையை தூக்கி ஆர்வமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பிறகு மாவட்ட தலைவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை அடிமட்ட அளவில் விரிவாக வளர்த்தெடுக்க வேண்டும். கிராம, பூத் அளவில் கட்சியின் கிளைகள் வளர வேண்டும். மாவட்ட தலைவர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். கோஷ்டி பூசல்களை நிறுத்திவிட்டு, ஒருமித்த கருத்துடன் கட்சியின் வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நிர்வாகிகளை அரவணைத்து செல்லாத மாவட்ட தலைவர்களுக்கு காங்கிரசில் இனி இடமில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு உட்கட்சி மோதலே முட்டுக்கட்டையாக உள்ளது. தமிழ்நாட்டில் காங்கிரசார் பல அணிகளாக பிரிந்து செயல்படுவதால் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகளின் செயல்பாடுகளை கட்சி தலைமை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். இதை தொடர்ந்து, ராகுல் காந்தி மாமல்லபுரம் காங்கிரஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மாலை 6 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தார். இரவு 7 மணிக்கு, இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு, டெல்லி சென்றடைந்தார்.

* காவிரி பிரச்னையில் விஜய்யுடன் சந்திப்பு ரத்து

தமிழகத்தில் காவிரி விவகாரம் முற்றுப்போயுள்ளது. காவிரி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்காததால் பல மாவட்டங்கள் வறண்டுபோயுள்ளன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பலர் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்கின்றனர். தற்போது தமிழக அரசும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆனால் விவசாயிகளின் கஷ்டத்தை தெரியாத ஆட்சிகளும், தினமும் ரீல்ஸ் வெளியிட்டு விளையாண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், விஜய்யுடன் சந்திப்பு நடந்தால், காவிரி பிரச்னை குறித்து பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் தமிழகத்துக்கு ஆதரவாக செயல்பட்டால் கர்நாடக மாநில தேர்தலில் பிரச்னை ஏற்படும். கர்நாடகா ஓட்டுக்காக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி ராகுல்காந்தியால் கூற முடியாது. அதேநேரத்துல தமிழக எம்பிக்களும் தேவை. இதனால் இருவரது சந்திப்பை தவிர்த்தாலே நல்லது என்று கருதி விஜய்யை சந்திக்காமல் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: